ராசி எப்போது வேலை செய்யும் ? C – 009

ஜோதிடத்தில் “விதி கெட்டால் மதியைப் பார்” என்றொரு பழமொழி உண்டு.

இதன் அர்த்தம் என்னவெனில் விதி எனப்படும் ஜாதகத்தின் ஆதாரத்தூணான லக்னமும் அதன் அதிபதியும் வலிமை இழந்திருந்தால் ராசி எனப்படும் சந்திரன் (சந்திரனுக்கு மதி என்றொரு பெயர் உண்டு.) இருக்கும் இடத்தையும் அந்த இடத்தின் அதிபதியையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டும் என்பதுதான்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா? இல்லை.. பலவீனமாக இருக்கிறாரா என்று கணிப்பதற்கே ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவமும் கணிப்புத்திறனும் தேவைப்படும்.

மேம்போக்காக ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாகவே இருக்கிறார் என்று தோன்றினாலும் நவாம்சம் போன்ற சூட்சும விஷயங்களில் அவர் பலவீனம் அடைந்திருந்தால் லக்ன அதிபதியால் ஜாதகரை வழி நடத்த முடியாது. இது போன்ற நிலையில் அந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியே லக்னம் போலவும், அந்த ராசியின் அதிபதியே லக்னாதிபதி போலவும் செயல்படுவார்.

மிகப் பெரும்பாலான ஜாதகங்களில் லக்னாதிபதி செயலிழந்து ராசிநாதன் செயல்படும் அமைப்பை நான் பார்த்திருக்கிறேன். எனவே ஒருவருக்கு பலன் சொல்வதற்கு முன் ஜாதகத்தில் ராசி வலுவாக இருக்கிறதா, லக்னம் வலுவாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணிக்கவேண்டியது அவசியம்.

மேலும் ஒரு முக்கியமான அமைப்பாக, தாமததிருமணம் மற்றும் தாமத புத்திரபாக்கியம் போன்றவைகளைத் தரும் களத்திர மற்றும் புத்திரதோஷ அமைப்புள்ள ஜாதகங்களில் கண்டிப்பாக லக்னாதிபதி வலுவிழந்து இருப்பார்.

இதையே வேறுவிதமாகச் சொல்லப் போனால் லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஜாதகங்களில் எவ்வித தோஷங்களும் கெடுபலன்களைச் செய்வது இல்லை.

இந்த உலகில் சகலவிதமான சுகங்களையும் பாக்கியங்களையும், ஒருவர் நேர்மையான முறையில், சரியான பருவத்தில், அனுபவிக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருக்க வேண்டும் லக்னாதிபதி பாபக்கிரகமாக இருந்தால் ஆட்சி உச்சம் போன்ற நேர்வலு அடைவதைவிட “’எனது பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சூட்சும வலுப் பெற்று இருக்க வேண்டும்.

பாபக்கிரகங்களான சனி செவ்வாய் சுபர் பார்வையின்றி நேரிடையாக லக்னத்தில் ஆட்சி பெறுவதும் ஜாதகம் வலுவிழந்த நிலைதான்.

லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றால் லக்னம் வலுவாகிறது என்றுதானே படித்திருக்கிறோம். இவர் என்ன தலைகீழாகச் சொல்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் இதற்கு முன் நான் பாலஜோதிடத்தில் எழுதிய “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு” எனும் ஆய்வுக்கட்டுரையையும், சென்றவருடம் எழுதிய “உங்கள் ஜாதகம் யோகஜாதகமா” என்ற தொடர்கட்டுரைகளையும் தேடிப் பிடித்துப் படியுங்கள். வேதஜோதிடத்தின் இன்னொரு பரிமாணம்  புரியும்.

லக்னாதிபதி வலுவிழக்கும் போதுதான் தோஷங்களால் கெடுபலன்கள் உண்டாகும். பாக்கியங்கள் தடைப்படும். உதாரணமாக களத்திரதோஷம் எனப்படும் தாரதோஷ மற்றும் புத்திரதோஷ ஜாதகங்களை எடுத்துக் கொண்டீர்களேயானால் கடுமையான தோஷங்கள் இருந்தாலும் லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஒருவருக்கு சரியான பருவத்தில் திருமணமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

லக்னாதிபதி வலுவாக இல்லாத அதேபோன்று தோஷமுள்ள ஒரு நபருக்கு தாம்பத்திய சுகமும், வாரிசும் தாமதமாகும். இதுபோன்ற நிலையில் லக்னத்தின் பணியை ராசியே எடுத்து செய்யும். இதனால்தான் லக்னம், ராசி இரண்டையும் இணைத்தே பலன் சொல்லவேண்டும் என்று நமது ஞானிகள் அறிவுறுத்தினார்கள்.

லக்னம் வலுவில்லாமல் ராசி முன்னின்று செயல்படும் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாமிடம், எட்டாமிடம் நன்றாக இருந்தும் ஒருவருக்கு திருமணம் தாமதமாகும்போது,  ராசியைக் கவனித்தோமானால் ராசிப்படி ஏழு எட்டாமிடங்கள் பலவீனமாக இருக்கும்.

இது போன்ற நிலையில் ராசிக்கு ஏழில் சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய் போன்ற அமைப்போ, ராகு, கேதுக்கள் ராசியோடு சம்மந்தப்பட்டோ ராசிக்கு இரண்டு எட்டு என்ற அமைப்பிலோ இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ராசிக்கு ஏழாமிடத்திலோ, குடும்பவீட்டிற்கு நேரெதிர் வீடான எட்டாமிடத்திலோ பாபக்கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

எட்டாமிடத்தில் இருக்கும் பாபக்கிரகம் குடும்ப பாவமான இரண்டாமிடத்தைப் பார்த்துப் பலவீனப்படுத்தும் என்ற அர்த்தத்தில் இங்கு ஏழாமிடத்தோடு எட்டாமிடமும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. இதைப்போலவே ராசிக்கு இரண்டாமிடத்தில் ஒரு பாபக்கிரகம் இருந்தாலும், ராசியிலேயே இருந்து ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்த்தாலும் இது பொருந்தும்.

பெரும்பாலான தாமத திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்குப் போகும் நிலைகள் போன்ற ஜாதகங்களைக் கவனித்தால் அதில் ராசிக்கு ஏழில் செவ்வாய், எட்டில் சனி, இரண்டில் செவ்வாய், ஏழில் சனி அல்லது இவர்கள் இருவரும் ராகு கேதுக்களோடு இரண்டு ஏழு எட்டில் மாறி அமர்வது போன்ற நிலைகளைக் காணலாம்.

இந்ததோஷம் ஆணாக இருந்தால் முப்பத்திமூன்று வயது வரையிலும் பெண்ணாக இருந்தால் முப்பது வயது வரையிலும் நீடிப்பதால் இந்த வயதிற்குப் பிறகே இந்த அமைப்பு உள்ளவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. அதற்கு முன் திருமணம் நடந்தால் இரண்டு வாழ்க்கை நிலையை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது ஆணுக்கு முப்பத்திஐந்து, பெண்ணுக்கு முப்பத்திமூன்று வரை நீடிப்பதும் உண்டு.

ஏழாமிடத்தைப் போலவே லக்னத்தின் ஜீவன ஸ்தானத்தின்படி ஒருவர் சம்பந்தம் இல்லாத தொழிலைச் செய்து கொண்டிருக்கும் நிலையில். அவருடைய ஜாதகத்தை துணுக்கமாக கவனித்தால் லக்னாதிபதி வலுவிழந்து ராசிக்குப் பத்திற்குடைய தொழிலை அவர் செய்து கொண்டிருப்பார்.

உதாரணமாக ஒருவர் டாக்டருக்கு படிக்க முடியுமா என்ற கேள்விக்கு லக்னப்படி பத்தாமிடத்தோடு சூரியன், செவ்வாய், குரு சம்பந்தப்படவில்லை எனில் படிக்க முடியாது என்று கணிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் லக்னாதிபதி அந்த ஜாதகத்தில் ராசியைவிட வலுவிழந்து, அதாவது லக்னத்தைவிட ராசியும், ராசிநாதனும் வலுப்பெற்று ராசிக்குப் பத்தாமிடம் செவ்வாயின் வீடாகி அங்கே குருபார்வையுடன் சூரியன் அமர்ந்திருந்தால் நமது கணிப்பு தவறும்.

                   ஒருவரின் தொழிலைக் கணிப்பது எப்படி?

ஒருவர் என்ன தொழில் செய்வார் என்று துல்லியமாகக் கணிப்பதற்கான விதிகள் நமது வேதஜோதிடத்தில் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு முந்தைய காலத்தில் தொழில்கள் குறைவாக இருந்ததும், குலத்தின் அடிப்படையில் தொழில்கள் பிரித்துக் கொள்ள்ளப்பட்டதும் காரணமாக இருக்கலாம்.

மிகப் பெரும்பான்மையான நமது மூலநூல்கள் பத்தாம் வீட்டு அதிபதி நிற்கும் நவாம்ச அதிபதியின் தொழில் ஒருவருக்கு அமையும் என்று சொல்கின்றன. ஆயினும் எனது முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆய்வில் இந்த விதி பத்து சதவிகித ஜாதகங்களில் கூட பொருந்தி வரவில்லை.

அதேபோல லக்னாதிபதி வலுவாக இருப்பது என்பதும் வெறும் பத்து சதவிகித ஜாதகங்களில்தான். இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் இந்த உலகில் முயற்சியின்றி அதிர்ஷ்டத்தால் எதையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் வெறும் பத்துசதவிகிதம் பேர்தான். மற்றவர்கள் அனைத்தையும் போராடியே பெறுவதற்குப் பிறந்தவர்கள்.

ஆகவே தொண்ணூறு சதவிகித ஜாதகங்களின் தொழில் அமைப்புகளைப் பார்த்தோமானால் ராசிப்படி அவரது பத்தாம்பாவத்தின் தன்மை என்ன? அது சரமா, ஸ்திரமா, உபயராசியா? அது நெருப்பு, நிலம், காற்று, நீர்த்தத்துவத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தது? பத்தாம் வீடு மேஷம் எனப்படும் சர நெருப்பா? கன்னி எனும் உபய நிலமா? விருச்சிகம் எனப்படும் ஸ்திர நீரா? போன்றவைகளையும், அதன் அதிபதி யார்? பாபக்கிரகமா? சுபக்கிரகமா? அவரின் குணங்கள், தன்மைகள் என்ன? என்பதைப்  பின்பற்றியே இருக்கும்.

இதனுடன் பத்தாம் வீட்டிற்கு கிடைக்கும் பார்வைகளையும் பத்தாம் அதிபதிக்கு கிடைக்கும் சேர்க்கை போன்ற தொடர்புகளையும் இணைத்துப் பார்த்தோமேயானால் ஒருவரின் தொழிலைத் கிட்டத்தட்ட சரியாகச் சொல்லி விடலாம்.

ஜோதிடத்தில் எதுவுமே எளிமையானது இல்லை. என்னதான் நீங்கள் கணித்தீர்கள் என்றாலும் நடக்கும் விளைவு என்பது பரம்பொருளின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதால் ஒரு ஜோதிடனின் எந்தக் கணிப்பும் நூறு சதவிகிதம் துல்லியமானது அல்ல.

சிலநேரங்களில் லக்னநாதனும், ராசிநாதனும் ஒருவராக இருக்கும் சூழ்நிலைகளிலும், ராசிக்கும் லக்னத்திற்கும் பத்தாம் அதிபதி கெட்டிருக்கும் சூழல்களிலும், ஒருவரின் தொழிலைக் கணிப்பது கடினமாக இருக்கும். இதுபோன்ற நிலைகளில் நடைபெறும் தசாநாதனே அவருக்குத் தொழிலைத் தரும் பொறுப்பை ஏற்பார்.

சிலர் நிரந்தரமில்லாமல் ஒவ்வொரு மகாதசை நடக்கும்போதும் தசைக்கு ஒரு தொழில் செய்வது இதுபோன்ற நிலைகளில்தான்.

சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம் என்பதாலும் அவருடைய ராசியான கடகம் நீர் ராசி எனப்படுவதாலும் ஒருவருக்கு கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சரராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ சந்திர தசையில் அந்த ஜாதகர் கடல்தாண்டி வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்.

அதேபோல கடல் சம்பந்தப்பட்ட இடங்களிலும், ஆற்றோரங்களிலும், நீர் நிலைகளிலும், கப்பல் மற்றும் துறைமுகங்களிலும் ஒருவரை வேலை செய்ய வைப்பவரும் சந்திரன்தான்.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் பத்தாமிடத்திற்கு அதிபதியாகியோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலோ அவருக்கு திரவப் பொருட்கள் மூலமான தொழில் அமையும். சந்திரனின் வலுவுக்கு ஏற்றார் போல ஜாதகர் ஜூஸ்கடை, மினரல்வாட்டர், பால்வியாபாரம், மதுபானங்கள் போன்ற தொழில்களைச் செய்வார்.

ஒன்பது கிரகங்களிலும் சந்திரன் ஒருவர் மட்டுமே வேகமான இயக்கம் உடைய சீக்கிரக் கிரகம் என்பதால், சந்திரனை ராசிப்படியோ லக்னப்படியோ தொழில் ஸ்தானாதிபதியாகக் கொண்டவர்கள், அல்லது சந்திரன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டவர்கள் உற்பத்தியாகி உடனே அழியும் பொருட்களை விற்பவர்களாக, அதன் மூலம் லாபம் அடைபவர்களாக இருப்பார்கள்.

சந்திரனின் சில குறிப்பிட்ட யோகங்கள் மகரம், கும்பம், துலாம், விருச்சிகம், மிதுனம், கன்னி எனப்படும் ஆறு லக்னங்களுக்கும் முழுமையான பலன்களைத் தராது. அதிலும் சனியின் மகரம், கும்பம் லக்னங்களுக்கு சந்திரன் நல்ல பலன்களைத் தரமாட்டார் என்பதால் சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள் இவர்களுக்கு வேலை செய்வது கடினம்.

அதேபோல கேந்திராதிபதிய தோஷமும் சந்திரனுக்கு அதிகமாக உண்டாவது இல்லை. அவர் பூரணச்சந்திரன் நிலை பெற்று அல்லது பவுர்ணமிக்கு மிக நெருங்கியிருந்து, கடகம் கேந்திரமாகி அதில் அமரும்போது மட்டுமே கேந்திராதிபத்திய தோஷ நிலை பெறுவார். பெரும்பாலும் மகரலக்னத்திற்கு மட்டுமே இந்த தோஷத்தைச் செய்து வாழ்க்கைத் துணையைக்  கெடுக்கிறார்.

உத்தரகாலாம்ருதத்தின் பதினேழாவது ஸ்லோகத்தில் மகாபுருஷர் காளிதாசர் கிரகங்களின் சுபஅசுபத் தன்மையைக் குறிப்பிடும்பொழுது சூரியனுக்கு நேர் எதிரில் பவுர்ணமியன்று இருக்கும் பூரணச்சந்திரன் குருவுக்கு நிகரான முழுச்சுபர் என்று சொல்லியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சந்திரன் தனது நண்பர்களின் லக்னங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை செய்வார்.

அதேபோல ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி தவிர்க்க முடியாத அமைப்பாகக் கருதப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவெனில் உலகின் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் இல்லாத வேத ஜோதிடத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பான உடுமகா தசை எனப்படும் தசாபுக்தி அமைப்பு, ஒருவர் பிறக்கும்நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது  என்பதுதான்.

அதாவது ஒருவர் இந்தப் பூமியில் பிறந்தது முதல் அவர் இறக்கும் வரையிலான அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்திலும், அதனையடுத்து அவர் இருக்கப் போகும் நட்சத்திரங்களின் தொடர்ச்சியிலுமே அமைகிறது.

இதற்கு கோட்சாரம் எனப்படும் சந்திரனின் அடிப்படையிலான தினசரி கோள் இயக்கங்கள் துணை நிற்கின்றன.

மனிதனின் வாழ்வை நூற்றியிருபது வருடங்களாகத தொகுத்து, அதனை சமமற்ற ஒன்பது பங்குகளாகப் பிரித்து, ஒருவனின் துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் முதல் தூக்கிக் கொண்டு போகும் கிழப்பருவம் வரை அவனுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடிவது சந்திரனுக்குப் பின் நிற்கும் நட்சத்திரங்களை வைத்துத்தான்.

கிரகங்களின் ஒளியை வைத்து ஒருவனின் உடல், மனம், குணம் போன்றவைகள் வடிவமைக்கப்படும் போது அதைவிட மகத்தான சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் நிரந்தர ஒளியை உள்வாங்கி, ஒரு இரட்டைப் பிரதிபலிப்பான் போல செயல்பட்டு, செயல்களையும் அதன் மூலம் சம்பவங்களையும் உருவாக்கி மதி எனும் சந்திரன் மனிதனை வழிநடத்துகிறான்.

இங்கு இரட்டைப் பிரதிபலிப்பான் என்ற வார்த்தையை ஏன் உபயோகப் படுத்துகிறேன் என்றால் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனின் ஒளியை மட்டுமே வாங்கி ஒளிக்கலப்பு செய்து பூமியின் உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சந்திரன் ஒருவர் மட்டுமே சூரிய ஒளியையும், சூரியனைப் போன்ற நமது கேலக்சியின் மற்ற முக்கிய நட்சத்திரங்களின் ஒளியையும் உள்வாங்கி பூமியில் மனிதகுலம் மூலம் செயல்களை நடத்தி வைக்கிறார்.

இதற்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதும், அவர் மட்டுமே இருப்பதும் அதாவது மற்ற கிரகங்களுக்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட துணைக்கோள்கள் இருக்கும் நிலையில் பூமிக்கு மட்டும் சந்திரன் ஒருவர் மட்டுமே எனற நிலை அமைந்ததுமே காரணம். இதைப் பற்றிய என்னுடைய ஆய்வுகளை பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்குகிறேன். இப்போது சந்திரனுடன் நிறுத்திக் கொள்வோம்.

நிறைவாக சந்திரன் ஒரு ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பில் இருந்து அவர் நல்லநிலையிலும் இருந்தால் கீழே நான் குறிப்பிடும் விஷயங்களில் நன்மைகளும், கெடுதல் தரும் அமைப்பில் இருந்தால் தீயபலன்களும் நடைபெறும். இவற்றையே ஜோதிடம் ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் என்ற அர்த்தத்தில் காரகத்துவங்கள் என்று குறிப்பிடுகிறது.

இதையே வேறுவிதமாக, சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் சுபத்துவமாக இருப்பின் கீழ்க்காணும் அமைப்புகளில் நன்மைகளும், பாபத்துவமாக இருப்பின் இதே விஷயங்களில் தீமைகளும் நடக்கும் என்றும் சொல்லலாம்.

மனம் அல்லது புத்தி, அம்மா காய்கறிகள் பூ, இளம்பெண், கலைகளில் ஆர்வம், நீர் சம்பந்தமானவை, கடல் கப்பல் நெல் அரிசி பால் வெள்ளி, வெண்கலம் அடிக்கடி பிரயாணம், கிணறு, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள். ஆஸ்துமா போன்ற நோய்கள், வெளிநாட்டுப் பயணம், இரவு, முத்து, தயிர் வெள்ளை, நாற்பத்தெட்டு நிமிடம் கொண்ட ஒரு முகூர்த்த நேரம். உப்பு, களையான முகம். தேன், உடனே முடிவை மாற்றுதல், அழகு மற்றும் அழகு சாதனப்பொருட்கள்,  பனி, இரவில் வேலை செய்தல், மேற்கு திசை சம்பந்தமான விஷயங்கள், மீன் உள்ளிட்ட நீரில் வாழும் உயிரினங்கள். பட்டு, மெல்லிய துணி.போன்றவை சந்திரனின் காரகத்துவங்கள் ஆகும்.

சந்திரன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மேலே சொன்ன விஷயங்களில் சாதகமற்ற பலன்கள் நடக்குமானால் சந்திரனின் பாதிப்பு நீங்க கீழ்கண்ட பரிகாரத்தைச் செய்வது நல்லது.

ஒரு வளர்பிறைத் திங்கட்கிழமை சந்திரஹோரையான இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள், ஒரு எவர்சில்வர் தட்டில் கேரளப்பெண்கள் அணிவது போன்ற  பாதிவெண்மை நிறம் கொண்ட சேலை ரவிக்கை, ஒரு லிட்டர் பால், ஒரு வெள்ளிக்காசு, ஒரு முத்து, இரண்டுமுழம் மல்லிகைப்பூ வைத்து முப்பத்தைந்து வயதிற்கு மிகாத ஒரு இளம்வயது சுமங்கலிப்பெண்ணிற்கு ஓடும் நீருக்கருகில் வைத்து தானம் செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருக்கும் நிலையிலும், சந்திரன் தீயவராகி வலுக்குறைந்திருக்கும் நிலையிலும்  இந்தப் பரிகாரத்தைச் செய்யக் கூடாது. பலன்கள் தலைகீழாக மாறும்.

அடுத்த வாரம் முதல் செவ்வாயைப் பற்றிப் பார்க்கலாம்…

சந்திரனுடைய திருத்தலங்கள் எவை..?

சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ அவருக்குரிய கிரகஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டிக்கொள்ள முடியும்.

கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் என்ற ஊரில் இருக்கும் திருக்கோவில் சந்திரஸ்தலம் எனப் புகழ்பெற்றது. இந்த ஸ்தலத்தில் சந்திரனை லக்னாதிபதியாகவோ யோகாதிபதியாகவோ கொண்டவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டு குறைந்தது ஒரு ஜாமநேரம் எனப்படும் இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருப்பது சந்திர வலுவைக் கூட்டும்.

சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் சோமநாதீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடலாம். திங்கள்கிழமைதோறும் செல்வது சிறப்பு. குறைந்தது ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் உள்ளே இருக்க வேண்டும். சேக்கிழார் பெருமானால் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இத்திருத்தலம் வடதிங்களூர் என்று புகழ்பெற்றது.

தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதியாகி அருள் புரிந்து வரும் சோமப்பா சாமிகளின் திருவிடத்தில் திங்கட்கிழமையோ அல்லது பவுர்ணமி தினமன்றோ சென்று வழிபடலாம். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதும் சந்திர பரிகாரம்தான். எல்லாம் வல்ல இறைவன், ஏழுமலைகளும் குனிந்து நிற்க தானுயர்ந்து நிற்கும் பெருமாள், என்னைத் தரிசிக்க உனக்கு ஒரு நொடி போதும் என சிக்கனம் காட்டி குபேரசம்பத்தை வள்ளலாக அள்ளித்தரும் அய்யன், அலர்மேல்மங்கைத் தாயாரை மார்மீது கொண்ட எம்பெருமான், வேங்கடமுடையான் வீற்றிருக்கும்  புனிதத்தலமான திருப்பதியும் சந்திரனின் வலுவைக் கூட்டும் திருவிடம்தான்.

மார்ச்  5, 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

1 Comment on ராசி எப்போது வேலை செய்யும் ? C – 009

Leave a Reply

Your email address will not be published.


*