சந்திரனால் யோகம் யாருக்கு? C – 008

பனிரெண்டு லக்னங்களிலும் மேஷம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஏழுலக்னங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மிகுந்த யோகங்களைச் செய்வார்.

மேஷலக்னத்திற்கு அவர் நான்காமிடத்திற்கு அதிபதி என்பதால் நான்கில் ஆட்சி பலத்துடன் இருக்கும்போது இரட்டிப்பு வலுவாக திக்பலமும் அடைவார் என்பதால் மேற்கண்ட நிலையில் மேஷத்தவர்களுக்கு தனது தசையில் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற வகைகளில் நன்மைகள் இருக்கும்.

சந்திரன் அம்மாவைக் குறிக்கும் மாதாகாரகன் என்பதால் சந்திரன் வலுப்பெற்ற நிலையில் பிறந்தவர்கள் தாயாரின் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். கடகத்தில் சந்திரனை ஆட்சியாகக் கொண்டும், ரிஷபத்தில் உச்சமாகவும், விருச்சிகத்தில் முறையான நீசபங்க அமைப்பிலும் உள்ளவர்கள் அம்மாவின் மேல் அளவற்ற பற்றும், பாசமும், பக்தியும் கொண்டிருப்பார்கள்.

கடகத்திற்கு அவர் லக்னாதிபதி என்பதால் ஆட்சி அல்லது உச்சம் மற்றும் கேந்திர கோணங்களில் இருக்கும்போது தனது தசையில் யோகங்களைச் செய்வார். இந்த அமைப்பு மூலம் சந்திரதசையில் ஜாதகருக்கு அந்தஸ்து, கவுரவம் உயரும். கடகத்தில் அவர் சனியின் பூசநட்சத்திரத்தில் அமர்வது கூடுதலாக ஆன்மிக ஈடுபாட்டையும் தரும்.

சிம்மத்திற்கு சந்திரன் பனிரெண்டிற்குடைய விரையாதிபதி என்பதாலும் அந்த இடம் பயணத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் ஜாதகரை தனது தசையில் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்லச் செய்து அதன் மூலம் நல்ல வாழ்க்கையை அமைத்து தருவார்.

துலாம் லக்னத்திற்கு சந்திரன் தொழில் ஸ்தானத்தை குறிக்கும் பத்தாமிட அதிபதி என்பதால் மற்ற கிரகங்களும் சுபவலு நிலையில் இருந்தால் ஜாதகரை தொழிலதிபர் ஆக்குவார். திரவப்பொருட்கள் மூலம் ஜாதகருக்கு கோடிகளைக் கொட்டித் தருவார். பெரும்பாலான மதுபானத் தொழிலதிபர்கள் துலாம் லக்னத்தில் பிறந்து சந்திரனின் தயவால் முன்னேறியவர்கள்தான்.

1அதே நேரத்தில் சிம்மம், துலாம் லக்னங்களுக்கு சந்திரன் உச்சமடைவது பெரிய நன்மைகளைத் தருவது இல்லை. சிம்மத்திற்கு அவர் உச்சமடையும் இடம் தொழில்ஸ்தானம் என்பதால் விரையாதிபதி தொழில் வீட்டில் உச்சமாவது ஜீவன அமைப்புகளில் விரயத்தைத் தரும். அதேபோல துலாத்திற்கு அவர் ஜீவனாதிபதியாகி உச்சமடையும்போது எட்டில் மறைவார் என்பதால் பத்திற்குடையவன் கெட்டால் நிலையான தொழில் இல்லை என்ற விதிப்படி இதுவும் நல்ல நிலை அல்ல.

விருச்சிகத்திற்கு ஒன்பதிற்குடைய பாக்கியாதிபதி எனும் நிலையை அடையும் அதேநேரத்தில் கெடுதல்களைத் தரும் பாதகாதிபதி என்ற அமைப்பையும் அவர் பெறுவார் என்பதால் ஒன்பதாமிடத்தில் வளர்பிறைச்சந்திரனாகி பாபர் சம்பந்தமின்றி தனியாக ஆட்சி பெறுவது மற்றும் ஏழாமிடத்தில் உச்சம் பெறுவது நன்மைகளைத் தராது. அதேநேரத்தில் தேய்பிறைசந்திரனாகவோ பாபர்களின் தொடர்பு பெற்றிருந்தாலோ கெடுதல்களைச் செய்யமாட்டார்.

தனுசு லக்னத்திற்கு அவர் எட்டிற்குடைய அஷ்டமாதிபதி எனும் நிலை பெறுவார். சூரியசந்திரர்களுக்கு அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது என்பதால் சுபச்சந்திரனாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய தசையில் ஜாதகரை வெளிநாட்டுக் குடிமகன் ஆக்குவார். வெளிநாட்டில் தொழில், வேலை அமைப்புகளை அமைத்துத் தருவார்.

மீனத்திற்கு ஐந்திற்குடையவனாகி பரிபூரண சுபராவார் என்பதால் அவரது உச்சம் ஆட்சி ஆகிய இரண்டு நிலைகளுமே பயன் தரும். வலுவுடன் இருந்தால் தன்னுடைய காரகத்துவங்களான திரவப்பொருட்கள், காய்கறிகள், வெள்ளைநிறம், அழியும் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் நன்மைகளைச் செய்வார்.

இதில் விடுபட்டு போன ரிஷபலக்னத்திற்கு அவர் மாரகாதிபதி என்பதாலும், ரிஷபநாதன் சுக்கிரன் சந்திரனைப் பகைவராக நினைப்பதாலும், ரிஷபத்திற்கு சந்திரன் வலுப்பெறுவது நல்லபலன்களைத் தராது. லக்னசுபர்களின் சம்பந்தம் இருந்தால் மட்டுமே சந்திரனால் நன்மைகள் இருக்கும்.

மிதுனத்தின் அதிபதி புதன் சந்திரனுக்கு மகனாவார். இவர்கள் இருவருக்குமான உறவுநிலையில் ஒரு விசித்திர அமைப்பாக புதனைச் சந்திரன் தாய்க்குரிய பாசத்துடன் நட்பாகக் கருதுவார். ஆனால் புதன் தன் தாயான சந்திரனை எதிரியாக நினைப்பவர் என்பதால் லக்னாதிபதிக்கு எதிரி வலுப்பெறக்கூடாது என்ற விதிப்படி சந்திரன் மிதுனத்தின் மாரகஸ்தானமான இரண்டில் தனித்து ஆட்சி பெறுவதும் விரையஸ்தானமான பனிரெண்டில் உச்சம் பெறுவதும் நன்மைகளைத் தராது.

அதுபோலவே கன்னிக்கும் புதன்தான் அதிபதி எனும் நிலையில் மேற்சொன்ன அமைப்பும், கருத்தும், கன்னி லக்னத்திற்கும் பொருந்தும். அடுத்து மகரத்திற்கு ஏழுக்குடைய மாரகாதிபதியாவார் என்பதோடு சனிபகவான் சூரிய சந்திரர்களை ஜென்மவிரோதிகளாகப் பார்ப்பவர் என்பதால் மகரத்தின் ஏழாமிடத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருந்து வேறு சம்பந்தம் ஏற்படாமல் தனித்திருக்கும் நிலையில் முழுமையான கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார் என்பதால் மகர லக்னத்திற்கு சந்திரனின் ஆட்சி உச்சங்கள் பெரிய நன்மைகளைத் தராது.

இறுதியாக கும்பலக்னத்திற்கு அவர் ஆறுக்கு அதிபதியாவார். லக்னாதிபதி  சனியின் பகைவர் என்பதால் அவர் ஆட்சியோ உச்சமோ அடைந்து தசை நடத்தினால் ஆரோக்கியக் குறைவுகளையும் கடன் தொல்லைகளையும் தருவார். உச்சம் பெற்று இருக்கும் நிலையில் வீடு, வாகனம், தாயார் ஆகிய நிலைகளைப் பாதிப்பார். கும்பத்திற்கு சந்திரன் நீசமாக விருச்சிகத்திலோ, அல்லது தனது ஆறாம் வீட்டிற்கு ஆறான தனுசிலோ, மூன்றிலோ இருப்பது நன்மை தரும்.

2ராகு, கேது தவிர்த்து மற்ற பஞ்சபூதக் கிரகங்களுக்கு சூரியனால் ஏற்படும் வக்கிர நிலை சந்திரனுக்கு ஏற்படுவது இல்லை. அதேபோல சூரியனுடன் மற்ற கிரகங்கள் நெருங்குவதால் ஏற்படும் அஸ்தங்க நிலையும் அவருக்கு கிடையாது. சந்திரன் சூரியனுடன் நெருங்கும் நிலையே அமாவாசை எனப்படுகிறது.

சந்திரனின் உச்ச நீச நிலைகளின் நுண்ணிய விஷயங்களைக் கவனித்தோமானால் ரிஷபராசியின் முதல் மூன்றுடிகிரியில் இருந்தால் மட்டுமே அவர் உச்சநிலையில் இருக்கிறார் என்று பொருள். மீதமுள்ள இருபத்தியேழு டிகிரியில் அவர் இருப்பது மூலத்திரிகோண நிலையாகும். அதேபோல நீசஅமைப்பிலும் விருச்சிகத்தின் முதல் மூன்று டிகிரிக்குள் இருக்கும்போது மட்டுமே கடுமையான நீசநிலை பெறுவார். எனவே சந்திரனின் நீச நிலையைக் கணிக்கும்போது டிகிரி பார்க்க வேண்டியது அவசியம்.

சந்திரன் மனத்திற்கு காரணமான கிரகம் என்பதால் சனியுடனோ ராகுவுடனோ அவர் இணைவது சரியல்ல. சனியுடன் அவர் இணைவது புனர்பூயோகம் என்று நமது கிரந்தங்களில் சொல்லப்படுகிறது. இந்த அமைப்பு சுபத்துவநிலையிலோ அல்லது சனிபகவான் எனது சூட்சுமவலுத் தியரிப்படி புனிதமடைந்திருக்கும் நிலையோ இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ஆன்மிகத்தில் சாதனை செய்யக்கூடிய நிலையையும் ஆன்மிக எண்ணங்களையும் தரும்.

மாறாக சனிபகவான் பாபத்தன்மை அடைந்து சந்திரனுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் நிலையில் ஜாதகர் குதர்க்கவாதியாகவோ, தான் நினைப்பதே சரியென்று மற்றவர்களோடு ஒத்துப் போகாதவராகவராகவோ, சந்தேககுணமும் தாழ்வுமனப்பான்மையும் உள்ளவராகவோ  இருப்பார்.

எனவே சனிபகவான் சந்திரனுடன் இணைவது பெரும்பாலும் நன்மைகளைத் தருவது இல்லை. ராகுவுடன் சந்திரன் இணையும் நிலை கிட்டத்தட்ட கிரகண அமைப்பு போன்றதுதான். ஒரு ஒளிக்கிரகத்தை ஆழமான இருட்டு நெருங்கும் போது ஒளி விழுங்கப்படும் என்பதால் சந்திரனின் வலு முழுக்க குறையும்.

சந்திரனுடன் ராகு சேர்ந்தால் இணையும் தூரத்தைப் பொறுத்து அந்த நபர் முடிவெடுக்கத் தெரியாதவராகவும், சிலநிலைகளில் மற்றவர்களை எடை போடத் தெரியாதவராகவும், தன்னைப் பற்றி மிகைமதிப்பீடு செய்யும் நிலையற்ற புத்தி கொண்டவராகவும் இருப்பார். இந்த அமைப்பு சந்திரன் உடல்காரகன் என்பதால் சந்திர அல்லது ராகு தசைகளில் உடல்நிலையையும் பாதிக்கலாம்.

மற்றொரு முக்கிய விஷயமாக  மகாபுருஷர் காளிதாசர் ஒரு ஜாதகத்தில் உன்னத அமைப்பாக குறிப்பிடும் இந்துலக்னம் எனப்படும் அமைப்பு சந்திரனை ஒட்டித்தான் கணிக்கப்படுகிறது.

இந்து என்ற வார்த்தைக்கும் சந்திரன் என்றுதான் அர்த்தம். இந்த முறையைப் பற்றி ஏற்கனவே நான் சுருக்கமாக விளக்கியிருக்கிறேன். ராகு, கேதுக்களைத் தவிர்த்து மற்ற ஏழுகிரகங்களுக்கும் கிரக களாபரிமாண எண்கள் என காளிதாசரால் மொத்தம் நூற்றியிருபதாக சில எண்கள் கொடுக்கப்பட்டு அவை லக்னத்திற்கு ஒன்பதாமிடத்திலிருந்தும், ராசிக்கு ஒன்பதாமிடத்திலிருந்தும்தான் கணக்கிடப்பட்டு  இந்துலக்னம் எனப்படுகிறது.

அடுத்த வாரமும் தொடர்ந்து சந்திரனுடன் பயணிப்போம்…

சகடயோகத்தால் நன்மையா தீமையா?

VISHNU_SKY_by_VISHNU108சந்திரனால் ஏற்படும் சில யோகஅமைப்புகளில் சகடயோகம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பாக நம்முடைய மூல நூல்களில் சொல்லப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் குருபகவான் இருக்கும் வீட்டிற்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் சந்திரன் இருக்கும் நிலை சகடயோகம் எனப்படுகிறது.

சகடம் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு சக்கரம் என்று பொருள். சக்கரத்தில் ஒரு இடம் நிலையாக ஒரு போதும் இருப்பதில்லை என்ற தத்துவத்தின்படி இந்த  யோகம் அமைந்திருப்பவரின் வாழ்க்கை சக்கரம் போல ஒரு நாள் கீழேயும் இன்னொரு நாள் மேலேயும் வாழ்க்கை முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக சகடயோகம் நன்மைகளைத் தரும் அமைப்பு அல்ல. இந்த யோகம் இருப்பவர் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பார். அதே நேரத்தில் குருவுக்கு ஆறில் சந்திரன் இருக்கும்போது குருபகவான் சந்திரனுக்கு எட்டில் இருப்பார் என்பதால் இது அதியோகம் எனப்படும் நல்ல நிலையாகி நன்மைகளைத் தரும். சகடயோகத்தில் இதுபோன்ற விதிவிலக்குகளும் உண்டு.

மேலும் சந்திரனோ குருபகவானோ ஆட்சி உச்சம் பரிவர்த்தனை போன்ற நிலைகளில் ஆறு, எட்டாக இருப்பது ராஜ சகடயோகம் அல்லது கல்யாண சகட யோகம் என்ற சுபநிலைகளாகவும் குறிப்பிடப்படுகிறது.

உதாரணமாக தனுசில் சந்திரன் இருந்து கடகத்தில் குருவும், ரிஷபத்தில் சந்திரன் உச்சமாக இருந்து தனுசில் ஆட்சியாக குருவும் இருக்கும் நிலைகள் ராஜ சகட யோகம் அல்லது கல்யாண சகட யோகம் என நன்மை தரும் அமைப்பாக நமது ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.

(பிப் 26 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

10 Comments on சந்திரனால் யோகம் யாருக்கு? C – 008

 1. நல்ல நினைவூட்டல், நன்றி. இது போன்ற விளக்கங்கள் மற்ற கிரகங்களுக்கும் தெரிவித்தால் நல்லது. நன்றி.

 2. ரிஷபத்தில் சந்திரன் உச்சமாக இருந்து தனுசில் ஆட்சியாக குருவும் இருக்கும் நிலைகள் ராஜ சகட யோகம் அல்லது கல்யாண சகட யோகம் என நன்மை தரும் அமைப்பாக என்ன பலன்கள் தரும் என்று குறிப்பிட முடியுமா குருஜி?

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 3. சந்திரன் மனகாரகர் அல்லவா. சூரியன் தானே உடல் காரகர். தாங்கள் சந்திரன் உடல் காரகர் என்று எழுதியிருக்கிறீர்களே. தட்டச்சு பிழையோ?

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code