அடுத்த அம்பானி நீங்கள்தானா? C – 005

நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு முக்கியக் கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன. இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் சூரியன் வேலை வாங்குபவராகவும், சனிபகவான் வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார்.

இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனிபகவான் சூட்சும வலுப்பெற்று தொழில்ஸ்தானமான பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அவர் உயர்பதவியில் இருந்தாலும் ஒருவருக்கு கீழே வேலை செய்பவராகவும், சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்புகொண்டால் அந்த ஜாதகர்  தானே முடிவெடுத்து சுயமாக இயங்குபவராகவும் சில நிலைகளில் முதலாளியாகவும் இருப்பார்.

செய்யும் தொழிலில் ஒருவர் சாதனை செய்வதற்கு சிம்மமும், சூரியனும் கெடக்கூடாது என்று சொல்லுவது இதைத்தான் குறிக்கிறது. பத்தாமிடத்தில் ஸ்தானபலம் பெறாமல் திக்பலம் பெறும் சூரியனும், செவ்வாயுமே மிகப்பெரிய தொழிலதிபர்களை உருவாக்கக் கூடிய வல்லமை படைத்த கிரகங்கள் ஆகும்.

அடுத்து பவர் (POWER) என1ப்படும் அதிகாரத்தை சூரியன் குறிப்பிடுவதை போல பவர் எனப்படும் மின்சாரத்திற்கும் காரகன் அவர்தான். ஜாதகத்தில் சுபத்துவமும் பத்தாமிட தொடர்பும் சூரியனுக்கு உண்டாகும் நிலைகளில் ஜாதகரை மின்சாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்ய வைப்பார்.

மின்சார சாதனங்களை விற்பனை செய்யக்கூடிய எலக்ட்ரிகல் ஸ்டோர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலைகளின் மூலமும் வருமானத்தைத் தருபவரும் சூரியன்தான். அதேபோல ஒருவர் கோதுமை பயிரிடும் விவசாயியாகவும் கோதுமையால் லாபம் அடைய வேண்டும் என்றாலும் சூரியனின் வலு அவசியம் தேவை.

ஆன்மீகத்தில் சூரியனின் பங்கு என எடுத்துக் கொண்டோமேயானால் சூரியன் சுபவலுப் பெறும் நிலைகளில் ஒருவரை மிகச்சிறந்த சிவபக்தராக்குவார். தமிழகத்தில் வழிவழியாக சிவத்தொண்டு புரியும் ஆதீனகர்த்தர்கள், தொன்மையான மேன்மை மிக்க சிவாச்சாரியார்கள் சூரியபகவானின் அருள் பெற்றவர்கள்தான்.

அடுத்து வேதஜோதிடத்தில் கிரகங்களின் வக்ரநிலை என்பது ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இந்த வக்ர நிலைக்கும் முக்கிய காரணம் சூரியன்தான். வக்ரம் என்பது மாறுதலான இயக்கம் என்று பொருள்படும். ஒரு கிரகம் வக்ரம் அடைந்தால் தனது இயல்பான பலனைச் செய்யாது.

பொதுவாக சூரியனுக்கு ஐந்து முதல் ஒன்பது ராசிக்குள் இருக்கும் பஞ்சபூதக் கிரகங்கள் வக்ரமடையும். ஒரு கிரகம் சூரியனுக்கு நேர் எதிரில் ஏழாமிடத்தில் இருந்தால் அது வக்ரத்தில் இருக்கிறது என்று நிச்சயமாக சொல்லி விடலாம். சந்திரனுக்கும் ராகு கேதுக்களுக்கும்  வக்ரநிலை இல்லை.

புதன் சூரியனை தன்னுடைய நெருங்கிய நண்பராக 4கருதுவதால் புதனுடன் சூரியன் இணைந்திருக்கும் நிலையில் நன்மைகள் உண்டு. அதே நேரத்தில் சுக்கிரனுக்கு சூரியன் ஆகாதவர் என்பதால் சுக்கிரனுடன் இணையும் நிலையில் சுக்கிரனது காரகத்துவங்களைப் பாதிப்பார். சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருடன் இணைந்தால் சூரியன் மிக நல்ல பலன்களை செய்வார்.

சுக்கிரனை பாதிக்கும் அதே சூரியன் சனியுடன் இணையும்போது தன்னுடைய இயல்புகளைப் பறிகொடுத்து தானே பாதிக்கப்படுவார். இருளைத் துரத்தும் சக்தி வெளிச்சத்திற்கு இருந்தாலும் மிகக்கடுமையான ஆழ்ந்த இருட்டுக்கு ஒளியை விழுங்கும் சக்தி உண்டு என்பதையே இது குறிக்கிறது.

இதை நிரூபிக்கும் விதமாக ராகுவுடன் நெருங்கும் தூரத்தைப் பொறுத்து சூரியன் மிகவும் பலவீனமடைவார். கேதுவுடனும் அப்படியே. ராகு கேதுக்களுடன் அவரும் சந்திரனும் இணையும் நிலையே கிரகணம் எனப்படுகிறது. இது அவர் முழுக்க தன் சக்தி அனைத்தையும் இழந்து பலவீனமாவதாகும்.

இன்னுமொரு முக்கியவிதியாக ஒரு ஜாதகத்தில் கெடுதல் செய்யும் நிலையாகச்  சொல்லப்படும் அஷ்டமாதிபத்யம் எனப்படும் எட்டாமிடத்தின் அதிபதி என்கிற தோஷமும் சூரியனுக்கு கிடையாது. அதாவது சூரியபகவான் எட்டாமிடத்திற்கு அதிபதியாகும் நிலையில் மற்ற பாபக்கிரகங்களைப் போல அசிங்கம் கேவலம் விபத்து போன்ற கெடுதல்களைச் செய்யமாட்டார். இந்த நிலை மகர லக்னத்திற்கு மட்டுமே உரியது.

அது ஏனெனில் பஞ்சபூதக்கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் சனி ஆகிய அனைவரும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் ஒரு நல்லவீடு ஒரு கெட்டவீடு என இரண்டு வீடுகளுக்கு அதிபதி ஆவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் ஒரு வீட்டுக்கு மட்டுமே அதிபதி ஆவார்கள் என்பதால் சூரியன், சந்திரன் இருவருக்குமே அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது.

இன்னுமொரு முக்கிய சூட்சுமமாக சூரியதசையில் சனிபுக்தியும் சனி தசையில் சூரியபுக்தியும் மாறுபாடான பலன்களைச் செய்யும்.  இவ்விரண்டு நிலைகளிலும் ஜாதகருக்கு நன்மைகள் இருக்காது. சந்திர புக்தியும் அப்படியே.

கிரகங்களில் நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் குருவும் சுக்கிரனும் அடுத்து சூரிய சந்திரர்களும் சனியும்தான். சனி பகவானின் வீடுகளான மகர கும்பத்திற்கு நேர் எதிரில் சூரிய சந்திரர்களின் கடகமும் சிம்மமும் அமைந்திருப்பது இதை உறுதிப்படுத்தும்.

நமது ஞானிகள் சுருக்கமாக தந்தை, மகன் உறவு சொல்லி சனிக்கும் சூரியனுக்2கும் ஆகாது என்று நமக்கு புரிய வைத்ததை வேறு விதமாக நாம்  சொல்வதாக இருந்தால் இருளும், ஒளியும் எதிரெதிர் நிலை கொண்டவை என்பதின்படி ஒளிக்கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒளியற்ற இருட்டு கருப்புக் கிரகமான சனி ஆகாதவர் என்று சொல்லலாம்.

அடுத்து சூரியபகவான் மேஷராசியில் முதல் இருபது டிகிரி வரை மட்டுமே உச்சம் எனப்படுகின்ற அதிகபலம் என்கிற நிலையை பெறுவார். உச்சத்திற்கும் ஆட்சி நிலைக்கும் இடைப்பட்ட நிலையான மூலத்திரிகோண வலுவை சிம்மராசியின் முதல் இருபது டிகிரி வரையிலும், மீதமுள்ள இருபது முதல் முப்பது வரையிலான பத்து டிகிரியில் ஆட்சி நிலையும் பெறுவார்.

சந்திரன் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் என்பதால் கடகத்தில் அவர் வலு இழப்பதில்லை. அதேபோல குருவின் மீனம், தனுசு, செவ்வாயின் மேஷம் விருச்சிகம் அவருக்கு மிகவும் பிடித்த வீடுகள். சூரியனை தனது முதல் நண்பராக கொண்ட புதனின் மிதுனம், கன்னி வீடுகளும் அவருக்கு ஏற்ற வீடுகளே.

மகரமும், கும்பமும், ரிஷபமும்  அவரை வலிமை இழக்கச்செய்யும் பகைவரின் வீடுகள். அதே நேரத்தில் கும்பத்தில் இருக்கும் சூரியன் தனது பார்வையால் தன் வீடான சிம்மத்தை பார்த்து வலுப்படுத்துவார் என்பதால் அவர் கும்பத்தில் இருக்கும் பொழுது சுபத்துவம் அடைந்திருந்தால் மிகப்பெரிய நன்மைகளை செய்வார்.

சுக்கிரனின் துலாம்ராசியில் முதல் இருபது பாகை வரை நீசம் எனப்படும் முற்றிலும் வலிமை இழக்கும் நீசம் எனப்படும் நிலையை சூரியன் அடைகிறார். நீசநிலையைக் கடந்து துலாம் ராசியில் இருபது டிகிரி முதல் முப்பது டிகிரிவரை இருக்கும் பொழுது பலன் சொல்லுவதில் தடுமாற வைப்பார்.

முக்கியமாக சிம்ம லக்னத்தவர்களுக்கு அவர் துலாமில் நீசமாகி இருபது டிகிரிக்கு அப்பால் இருக்கும்போது லக்னாதிபதி நீசம் என்று கணித்தோமானால் பிழைகள் வரும். எனவே சூரியன் இருக்கும் டிகிரி நிலையைக் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே ஒரு கிரகத்தின் உச்சநீச அமைப்புகளை பார்த்து பலன் சொல்லும் பொழுது அவற்றின் துல்லிய டிகிரி நிலைகளை கவனித்து சொன்னால்தான் பலன் சரியாக வரும்.

அதைப் போல சூரியனின் அதிகபலம் எனும் பொருள்படும் அதி உச்சநிலை மேஷத்தின் பத்தாவது டிகிரியிலும், அதிக பலவீன நிலை எனப்படும் அதி நீசநிலை துலாத்தின் பத்தாவது டிகிரியிலும் ஏற்படுகிறது.

இன்னுமொ3ரு கருத்தாக சூரியன் மீனத்தில் இருப்பது அரசுவேலை, அரசியல் போன்றவைகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் அவர் மீனத்தில் இருக்கும் நிலையில் தன் ராசியான சிம்மத்திற்கு எட்டில் அமர்வார். பாவத்பாவம் எனும் ஒரு அமைப்பின்படி தன் வீட்டிற்கு ஆறு எட்டில் மறையும் ஒரு கிரகம்  தன்னுடைய காரகத்துவங்களைச் செய்யாது.

நிறைவாக ஒருவருடைய ஜாதகத்தில் கீழ்க்காணும் அமைப்புகளுக்கு சூரியனே பொறுப்பு வகிக்கிறார்.  சூரியன் சுபபலத்துடன் வலுவாக இருக்கும் நிலைகளில் கீழ்கண்டவைகளில் ஒருவருக்கு நன்மைகள் நடக்கும். அசுபபலத்துடன் இருந்தால் இதே விஷயங்களில் கெடுதல்கள் இருக்கும்.

தந்தை, ஆண், அதிகாரம், நெருப்பு, அரசன், கண், அரசுவேலை, காரச்சுவை, கிழக்குத்திசை, செயல்திறன், சிகப்பும் ஆரஞ்சும் கலந்த அக்னிநிறம், காய்ச்சல், தலை, தாமிர உலோகம், பாதரசம், மின்சாரம், மருத்துவம், விதைகள், காடு, ஷத்ரிய குலம், தந்தைவழி உறவினர்கள், பித்தநோய், தலைவலி போன்ற தலையில் வரும் வியாதிகள், பகல்பொழுது, சிவபெருமான், தவம், கோதுமை, மாணிக்கம், மயில், தேர் எனப்படும் ரதம், ஒளி, பிரயாணம், மருந்துகள், ஞாயிற்றுக்கிழமை, அரசியல் ஈடுபாடு, தேன், இருதயம், திருடன், விஷம், சித்துவேலைகள் என ஏமாற்றுதல், உஷ்ண நோய்கள் ஆகியவற்றில் சூரியன் ஆதிக்கம் செய்வார்.

அடுத்த வாரம் சந்திரனைப் பற்றிய சூட்சுமங்களைப் பார்ப்போம்.

சூரியனுக்கான திருத்தலங்கள் எவை? பரிகாரங்கள் என்ன?

5நவக்கிரகத் தலங்களில் கும்பகோணம் அருகில் உள்ள ஊரான சூரியனார் கோவிலில் அமைந்திருக்கும் திருக்கோவிலே தமிழ்நாட்டில் சூரியனுக்கான முதன்மைப் பரிகாரத்தலம் ஆகும். சென்னையில் போரூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் சேக்கிழார் பெருமானால் நிறுவப்பட்ட ஈஸ்வரன் கோவில் வடசூரியனார் கோவில் என்று புகழ் பெற்றது. அதேபோல சென்னையிலேயே ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு என்ற கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவனும் சூரியனின் அருளை நமக்குத் தருபவர்தான்.

இறைவழிபாடு தாண்டி பரிகாரங்கள் என்று பார்த்தோமானால் சூரியன் மோசமாகக் கெட்டிருக்கும் நிலையில் செய்ய வேண்டிய பரிகாரங்களுள் ஒன்றாக ஒரு ஞாயிற்றுக்கிழமை உச்சிப்பொழுது ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சூரியஹோரையில் குறிப்பிட்ட அளவு கோதுமையை தானம் செய்வதைச் சொல்லலாம். இது சூரியனின் பலவீனத்தைப் போக்கி நன்மைகளைச் செய்யும். ஆனால் சூரியன் வலுவாக இருக்கும் நிலையில் இதைச் செய்தால் அவரால் கிடைக்கும் நன்மைகள் தடைபடும்.

(பிப்  5-2015 மாலை மலர் நாளிதழில் வெளிவந்தது) 

10 Comments on அடுத்த அம்பானி நீங்கள்தானா? C – 005

 1. சனி யோடு சேரம் சூரியன் பலம் இழக்கிறார் என்றால் மகரலக்கனத்திற்க்கு எட்டாமதிபதி லக்கனாதி பதியுடன் பதினொன்றில் சேர்ந்திருக்க அவர் அரசு வேலை கிடைக்காது அரசு வழியில் எந்த ஆதாயமும் கிடைக்காது அப்படி தானே ,,மேலும் ஒரு சந்தேகம் என்னவென்றால் பதினொறில் சூரியன் இருந்தால் எந்த தோஷமும் இல்லை என்று படித்த ஞாபகம் ,ஆனால் ராகு கேதுவால் உண்டாகும் கால சர்ப்பதோஷ்ம் இதற்கு விதி விளக்க

 2. உங்களுடைய பழய பதிவுகளை தான் அதிகமாக தேடிதேடி படிக்கிறேன் நிறை சந்தேகங்களுக்கு விடைகள் கிடைகிறது நன்றி ஐயா

 3. சனி யோடு சேரம் சூரியன் பலம் இழக்கிறார் என்றால் மகரலக்கனத்திற்க்கு எட்டாமதிபதி லக்கனாதி பதியுடன் பதினொன்றில் சேர்ந்திருக்க அவர் அரசு வேலை கிடைக்காது அரசு வழியில் எந்த ஆதாயமும் கிடைக்காது அப்படி தானே ,,மேலும் ஒரு சந்தேகம் என்னவென்றால் பதினொறில் சூரியன் இருந்தால் எந்த தோஷமும் இல்லை என்று படித்த ஞாபகம் ,ஆனால் ராகு கேதுவால் உண்டாகும் கால சர்ப்பதோஷ்ம் இதற்கு விதி விளக்கம் தர முடியுமா

  • வணக்கம்

   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code