முழு நிலவு ரகசியங்கள் C – 007 – Muzhu Nilavu Ragasiyangal

ஒரு ஜாதகத்தின் உயிர் எனப்படுவது லக்னம் என்றால், அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடல் சந்திரனாகும். சந்திரன் இருக்கும் வீடே ராசி எனப்படுகிறது. லக்னமும், ராசியும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை. எப்படி ரயில் இயங்க இரண்டு தண்டவாளங்களும் அவசியமோ, அதைப்போல ஜாதகத்தில் பலன் சொல்ல லக்னம், ராசி இரண்டுமே தேவை.

எந்த ஒரு ஜோதிட முறையிலும் ஒருவருக்குப் பலன் சொல்ல வேண்டுமெனில் லக்னம் மற்றும் சந்திர ராசி அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்துப் பலன் சொல்வதே துல்லியமானதாக இருக்கும். உதாரணமாக திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு லக்னத்திற்கு ஏழாமிடத்தையும், ராசிக்கு ஏழாமிடத்தையும் இணைத்துப் பார்த்து பலன் சொன்னால்தான் அது சரியாக இருக்கும்.

ஒருவருக்கு உயிர் என்று சொல்லப்படும் லக்னமும், அந்த லக்னத்தின் அதிபதியும் பலவீனமாகி கெட்டிருந்தால் ராசிநாதன் என்று சொல்லப்படக் கூடிய சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதி கிரகமே அந்த ஜாதகரை வழிநடத்தும் மற்றும் அந்த ஜாதகத்தின் பலன்களை எடுத்துச் செய்யும். ஒரு ஜாதகத்தின் பலன்களைக் கணிக்கச் சிரமமாக இருப்பது இதுபோன்ற நுண்ணிய சூழல்களில்தான்.

முக்கியமாக ஒருவருக்குச் சொல்லும் பலன் தவறிப் போவது, ஒரு கிரகம் சுபத்துவம் அடைந்த்திருக்கிறதா அல்லது அசுப நிலையில் இருக்கிறதா என்பதைக் கணிக்காமல் சொல்லும் போதுதான்.

உதாரணமாக: சனியோ, செவ்வாயோ, ராகுவோ, கேதுவோ அசுப நிலையில் இருக்கும்போது தங்களுடைய தீய காரகத்துவங்களை ஜாதகருக்கு வலுவாகச் செய்வார்கள். ஆனால் அவர்கள் சுபத் தன்மையோ, சூட்சும வலுவோ பெறும் பொழுது தீயதைச் செய்யும் வலிமை இழந்து அதற்கு நேர்மாறான பலன்களை செய்வார்கள்.

பரம்பொருள் இந்த பாப கிரகங்களின் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு பற்றி எனக்குத் தெரிய அனுமதித்தவைகளை ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

அதிலும் ஒரு கிரகத்தின் சூட்சும வலுவை துல்லியமாகக் கணிப்பதற்கு தெளிவான விதிகளை வகுக்கும் எனது ஆய்வு இன்னும் முற்றுப் பெறாத நிலையில் இருப்பதால், கிரகங்கள் சுபத்துவம் அடைவதில் உள்ள ரகசியத்தை மட்டும் இப்போது விளக்குகிறேன் .

அதில் ஒன்று சந்திரன் சம்பந்தப்பட்டது என்பதால் சந்திரனைப் பற்றிய தலைப்பில் அதைச் சொல்வதே பொருத்தமானதாகவும் இருக்கும்.

பாப கிரகங்கள் எனப்படுபவை ஒளி இழந்த கிரகங்கள் என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அந்தக் கிரகங்கள் சுப கிரகங்களான ஒளி அதிகமுள்ள கிரகங்களிடம் இருந்து ஒளியைக் கடன் வாங்கும் போது சுபத்துவம் பெறுகின்றன.

இதிலும் ஒரு சூட்சுமமாக தனக்கு அருகில் இருக்கும் சுப கிரகங்களிடமிருந்து ஒரு பாபக்கோள் பெறும் ஒளியே அதனை முழுக்க சுபத்துவமடையச் செய்யும். இதன்படி ஒளியிழந்த இருள் கிரகமான சனி தனக்கு அருகில் இருக்கும் முழு ஒளிச் சுபரான குருவின் ஒளியை பார்வை என்ற பெயரில் கடன் வாங்கும்போது முழுமையான சுபத்துவம் பெறுவார்.

குருவின் பார்வையை விட குருவுடன் இணையும் போது சனி சற்றுக் குறைவான சுபத்துவத்தை அடைவார். இதில் சனியின் இருள் தன்மையை அதாவது பாபத் தன்மையை குரு மாற்ற வேண்டுமெனில், குருவும் முழுமையான பார்வைத் திறனுடன் – அதாவது ஒளித் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பலவீனமாக இருந்தாலோ, பகை வீடுகளில் பகைவருடன் இருக்கும் நிலையிலோ அவர் ஒளி குறைந்து இருப்பார் என்பதால் அவரால் இன்னொரு கிரகத்தை சுபத்துவப்படுத்த முடியாது.

அதேபோல சனிக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாப கிரகமான செவ்வாய் குருவின் பார்வையை விட, சந்திரனின் பார்வையைப் பெறும்போது மட்டுமே அதிக சுபத்துவம் அடைவார்.

ஏனெனில் செவ்வாய்க்கும் குருவிற்கும் உள்ள தூரம் அதிகமானது. அதேநேரத்தில் பூமியைச் சுற்றி வரும் சந்திரனுக்கும், பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய்க்கும் உள்ள தூரம் குறைவு. எனவே குருவின் பார்வையை விட, சந்திரனின் பார்வையும், இணைவுமே செவ்வாய்க்கு மிகுந்த சுபத் தன்மையைத் தரும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் சந்திரனுக்கு நேரெதிரில் ஏழாமிடத்தில் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் பெற்று நன்மைகளைச் செய்வார். அந்தச் சுப வலு சந்திரன் அப்போது கொண்டிருக்கும் ஒளி நிலையைப் பொருத்து அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

சந்திரன் வளர்பிறை நிலைகளில் சூரியனுக்கு கேந்திரமாகவோ, சூரிய ஒளியை அதிகம் பெற்று ஆட்சி, உச்சம் பெற்ற நிலையிலோ, அல்லது குருவுக்கு திரிகோணங்களில் இருந்து குருவின் ஒளியை அதிகம் பெற்ற நிலையிலோ, அல்லது சந்திரனுக்கு பலமுள்ள நள்ளிரவு நிலையான நான்காவது கேந்திரத்தில் திக்பல வலுவுடனோ முழு ஒளித் திறனுடன் இருந்து தனது பார்வையால் செவ்வாயை சுபத்துவம் அடையச் செய்யும்போது செவ்வாயால் அதிகம் நன்மைகள் இருக்கும்.

சந்திரனுடன் செவ்வாய் இணைவதும் சுபத்துவமே. ஆனால் அந்த நிலையிலும் நான் மேலே சொன்ன ஒளித்திறனுடன் சந்திரன் இருக்க வேண்டும். இதையே நமது கிரந்தங்கள் சந்திர மங்கள யோகம் என்று சொல்கின்றன.

ஒரு ஜாதகத்தின் பத்தாவது கேந்திரமாகிய தொழில் வீடு, பகல் உச்சிப் பொழுதையும் அதற்கு நேரெதிரான நான்காம் வீடு, நள்ளிரவு நேரத்தையும் குறிக்கிறது. எனவேதான் பத்தாமிடத்தில் நடுப்பகலில் இருக்கும்போது சூரியனுக்கு அதிக பலமான திக்பலம் எனவும், நான்காமிடத்தில் நள்ளிரவில் சந்திரனுக்கு திக்பலம் எனவும் நமது ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் செவ்வாய் கடுமையான அமைப்பில் ஆட்சி, உச்சம் போன்ற வலுப் பெற்ற நிலைகளில் சுபத்துவமின்றி இருக்கும்போது, தனது கொடிய காரகத்துவங்களையே செய்வார். சந்திரனால் பாபத்தன்மை நீங்கப் பெறும்போது மட்டுமே பூமிலாபம் போன்ற சுப விஷய்ங்களைச் செய்வார். இதனை விரிவாக செவ்வாயைப் பற்றிச் சொல்லும்போது தெளிவாக்குகிறேன்.

அதேபோல நீசமடைந்த ஒரு கிரகம் தனது வலிமையைத் திரும்பப் பெறும் நீச பங்கம் எனும் அமைப்பிற்கு காரணமானவரும் சந்திரன்தான். சூரிய ஒளியைப் பெற இயலாத நிலையில் கிரகங்கள் நீசம் எனப்படும் வலிமை குன்றிய நிலையை அடைகின்றன. சந்திரன் மூலமாக அதை வேறு வழிகளில் பெறும்போது இழந்த வலுவை மீண்டும் அடைகின்றன.

சந்திரனுக்கு 1,4,7,10-ல் இருந்து சந்திரனால் பிரதிபலிக்கப்பட்ட சூரிய ஒளியைப் பெறும் கிரகம், இழந்த தன் ஒளியைக் கடன் வாங்கி வலிமை பெறுகிறது என்பதைத்தான் ஞானிகள் சந்திர கேந்திரத்தில் நீசமடைந்தவன், நீச பங்கம் அடைவதாகக் கூறினார்கள்.

அதேநேரத்தில் சந்திரனே நீசமடைந்தால் என்ன செய்வது? அப்போது அவர் தனக்கு ஒளியைத் தரும் சூரியனுக்கு எதிரில் இருக்க வேண்டும். அது சந்திரனை வலுவிழக்கச் செய்யாது.

ஒரு விசித்திர நிலையாக செவ்வாய் ஒருவர் மட்டுமே தன் வீட்டில் நீசம் பெறும் இரண்டு கிரகத்துடனும் நீச, உச்ச நிலைகளில் பரிவர்த்தனை பெறுவார். அதாவது சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெறும் நேரத்தில் விருச்சிக நாதன் செவ்வாய் கடகத்தில் இருந்தால் அவரும் நீசம் பெறுவார்.

இந்த நிலை நீசப் பரிவர்த்தனை ஆவதால் சந்திர, செவ்வாய் இருவருமே பங்கம் பெற்று நீச பங்க நிலையை அடைவார்கள். அதேபோல சனி மேஷத்தில் நீசம் பெறும் நிலையில், செவ்வாய் சனியின் வீடான மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால் இருவரும் பரிவர்த்தனை அடைந்து சனியின் நீச நிலை பங்கம் பெறும்.

ஜோதிடத்தில் விதி என்று ஒன்று இருந்தால் விலக்கு என்ற ஒன்று இருந்தே தீரும் என்பதன்படி, நீசம் என்பது ஒளியிழந்த நிலை என்றாலும் வைகாசி மாதம் விருச்சிக ராசியில் பிறந்தவருக்கு சந்திரன் நீசம் என்று கணக்கிட முடியாது.

அப்போது முழு பவுர்ணமி நிலை என்பதால், சூரியனுக்கு நேரெதிரே இருக்கும் சந்திரன் தனது முழு வலிமையுடன் இருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதோடு இந்த அமைப்பின் விசாகம் நான்காம் பாதம் ஒரு இறையின் அவதார நாள் என்பதையும் உணர்ந்து கொண்டால் உச்ச, நீச நிலைகளை கணக்கிடும் முறையும் ஜோதிடத்தில் சூரிய, சந்திரர்களின் பங்கை உணரும் ஆற்றலும் பிடிபட்டு விடும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு சந்திரன் எட்டில் இருப்பது என்று பொருள்.

ஒரு கிரகம் எட்டில் இருக்கும்போது தனது வலிமையை இழக்கின்றது என்பதை அறிந்த நமது ஞானிகள் கோட்சார நிலையில் ஒருவரின் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் மறையும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று குறிப்பிட்டு அந்த நாட்களில் முக்கியமான முடிவுகளையோ, புதிய முயற்சிகளையோ, நீண்ட பிரயாணங்களையோ செய்யவேண்டாம் என நமக்கு அறிவுறுத்தினார்கள்.

இதன் உண்மைக் காரணம் என்னவெனில் சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் இந்த நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம்மால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது என்பதுதான்.
இந்த சந்திராஷ்டம நிலைக்கும் சில விதிவிலக்குகள் நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. குருவின் பார்வையையோ, சேர்க்கையையோ சந்திரன் பெறும் நாட்களில் ஒருவருக்கு சந்திராஷ்டம நாட்களின் கெடுபலன்கள் இருக்காது என்பது அவற்றில் ஒன்று.

சந்திரனின் நீச நிலையை நான் விளக்கியது சந்திராஷ்டம நிலைக்கும் பொருந்தும் என்பதால் சூரிய ஒளியைப் பெற்று முழுவலிமையுடன் சந்திரன் இருக்கும் நாட்களிலும் சந்திராஷ்டமம் கெடுபலன் தராது.

(பிப் 19 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 Comments on முழு நிலவு ரகசியங்கள் C – 007 – Muzhu Nilavu Ragasiyangal

  1. குருஜிக்கு வணக்கம்,
    இருள் கிரகங்களான ராகுகேதுக்கள் ஔி யைவாங்கி பிரதிபலித்து சுபத்துவம் அடைவதாக கூறியுள்ளீர்கள்.

    ஆனால் சனி ஒரு கருமை கிரகம். மிக மிக குறைந்த ஔியை பெற்றது. எவ்வாறு சனியின் பார்வை மிக கடுமையானது என விளக்குங்கள்.

    ஔி அற்ற சனி கிரகம், எவ்வாறு பார்வை பலத்தை பெற்றுள்ளது என்பதை கருணை கூர்ந்து விளக்குங்கள் ஐயா

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code