சூரிய சந்திர சூட்சுமங்கள் C – 002

ஜோதிஷம் என்ற சொல்லிற்கு ஜோதியை… அதாவது ஒளியைப் பற்றிச் சொல்லுவது என்று பொருள்.

இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் அறிவெனும் ஒளி என்று அர்த்தம். “அறிவுதான் ஒளி” என்ற அர்த்தமுள்ள வார்த்தையை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த தெய்வீகசாஸ்திரத்தில் அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு நம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒருபோதும் இடம் தரவில்லை.

எந்த ஒரு மதிப்பு வாய்ந்ததையும் தெய்வம் அருளியது என்று சொல்வது நமது மரபு. நம்முடைய மேலான இந்து மதத்தின் உன்னதமான புராண இதிகாசங்களில் இந்த தெய்வீக வரிகளைக் அடிக்கடி காணலாம். அநேக இடங்களில் இதை பிரம்மன் உபதேசித்தார், இதை சிவபெருமான் இவருக்கு அருளினார் என்பதை நீங்கள் படித்திருக்கலாம்.

மனித முயற்சியினால் கண்டுபிடிக்க முடியாத அற்புதங்களைக் கொண்ட இந்தக் ஜோதிடக்கலையின் மிக உன்னதமான சில சூட்சும விஷயங்கள், (கிரகங்களின் காரகத்துவங்கள் மற்றும் ராசிகளின் ஆதிபத்தியங்கள்) போன்றவை நமது ரிஷிகள் தவம் தியானம் போன்ற ஆன்மீக உச்சநிலைகளில் மனம் அடக்கி பரம்பொருளுடன் ஒன்றி இருக்கும்போது எல்லாம் வல்ல இறைசக்தியால் அருளப்பட்டவை.

1சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை ராமானுஜம் தனது சில சிக்கலான கணிதங்களுக்கான விடை தனக்கு பிரபஞ்சத்திலிருந்து நேரிடையாகக் கிடைத்தது என்று சொல்லியிருக்கிறார் என்பதோடு சில தியரிகள் அல்லாத அவரது நேரடி விடைகளை அவர் எப்படி எழுதினார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இன்றுவரை கணித ஆராய்ச்சியாளர்கள் திணறுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதைப்போலவே உலகின் வேறு எந்த ஜோதிடமுறையிலும் இல்லாத, வேதஜோதிடத்தின் தனிச்சிறப்பான, இந்திய ஜோதிடத்தில் மட்டுமே உள்ள, தசாபுக்தி அமைப்பு எனும் மனிதவாழ்வை பிறந்ததிலிருந்து இறுதிவரை பகுதிபகுதியாய் பிரித்து பலன்சொல்லும் அமைப்பை பராசரமகரிஷி எப்படி அமைத்தார் என்பதும் இன்றுவரை யாரும் அறியாத தேவரகசியம்தான்.

மனித வாழ்வை 120 வருடங்களாக அவர் எந்தக் கணக்கில்  எடுத்துக் கொண்டார்? அந்த 120 வருடங்களையும் ஒன்பது கிரகங்களுக்கு சமமாக இல்லாமல் கேதுவிற்கு 7 வருடங்கள், சுக்கிரனுக்கு 20,  சூரியனுக்கு 6, சந்திரனுக்கு 10, செவ்வாய்க்கு மீண்டும் 7, ராகுவிற்கு 18, குருவிற்கு 16, சனிக்கு 19வருடங்கள் என எதன் அடிப்படையில் எப்படிப் பிரித்தார் என்பது ஒரு மாபெரும் பிரம்ம ரகசியம்.

மேலும் ஒவ்வொரு தசை வருடங்களையும் ஒன்பது பிரிவுகளாக புக்திகள் என சில மாதங்களாகப் பிரித்தும் அந்த புக்திகளை ஒன்பதாக சில வாரங்களாக்கி  அந்தரங்கள் எனவும் அந்த அந்தரங்களை ஒன்பதாக நாட்கள் மணிகளாக்கி சூட்சுமம் பிராணன் சித்திரம் என உட்பிரிவுகள் அனைத்தையும் சமமற்ற பங்குகளாகப் பிரித்து மனிதவாழ்வின் ஒரு நொடியைக் கூட துல்லியமாக்கிய அவரது இந்தக் கணிதம் ஏதேனும் ஒரு உன்னதகணத்தில் தெய்வீகநிலையில் பரம்பொருளே பராசரமகரிஷிக்கு நேரடியாக அருளியிருக்க முடியுமே அன்றி மனித யத்தனத்தில் அமைக்கப்பட்ட கணிதங்கள் இல்லை இவை.

தசாபுக்தி வருடங்களை மகரிஷி பராசரர் எப்படி அமைத்தார் என்பதைக் கண்டுபிடிக்க இன்றுவரை பலர் முயற்சித்து வருகிறார்கள். நானும் இதைப் பற்றிய ஆய்வில் சில வருடங்களைச் செலவிட்டபோதுதான் சுபகிரகங்கள் பாபக்கிரகங்கள் என நமது ஞானிகளால் ஒன்பது கிரகங்களும் எப்படி எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன, அதன் வரிசை எப்படி அமைக்கப்பட்டது என எனக்குத் தெரிய அனுமதிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன் நான் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவுகளை நான்  ஏற்கனவே பாலஜோதிடத்தில் எழுதியிருக்கிறேன். என்னுடைய www.adityaguruji.in எனும் இணையதளத்திலும் இவற்றைக் காணலாம்.

ஜோதிடத்தின் தலைவன் சூரியன்தான். நாமும், நாம் தோன்றுவதற்கு ஆதாரமான இந்த பூமியும் உருவாகக் காரணமான சூரியன் எனும் இந்த மாபெரும் ஒளியால்தான் ஜோதிடத்தின் மூலகர்த்தாக்களான பஞ்சபூதக் கிரகங்கள் எனப்படும் குரு சுக்கிரன் புதன் செவ்வாய் சனி ஆகிய ஐந்து கிரகங்களும் தோன்றின.

2கிரகங்கள் அனைத்தும் சூரியனிடமிருந்து பெறும் ஒளியை மற்ற கிரகங்கள் மீது பிரதிபலிக்கின்றன. மற்றவைகளின் ஒளியை வாங்கிக் கொள்கின்றன. இந்த ஒளிக்கலப்புத்தான் உலகில் உயிரினங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

ஜோதிடத்தின் மூலக்கருத்தே உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் அதன் செயல்களையும் அதாவது மனிதனையும் அவன் சிந்தனைகளையும் சூரியனும், சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய ஏனைய நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் ஆக்கிரமித்து இயக்குகின்றன கட்டுப்படுத்துகின்றன என்பதுதான்.

ஒளியே… ஜீவன்.

மூலாதாரமான ஒளியை முன்னிலைப்படுத்துவதுதான் நமது மேலான இந்து மதம். உலகின் மிக மூத்த ஆதிமதமான நமது இந்து மதம் “சிவம்” எனும் செம்பொருளான சூரியனைத்தான் மூல முதல்வனாக வணங்குகிறது.

சூரியன் இல்லையேல், அதன் ஒளி இல்லையேல் இந்த பூமி இல்லை, கிரகங்கள் இல்லை, நீங்கள் இல்லை, நான் இல்லை, இந்த புல், பூண்டுகளும் இல்லை.

ஒவ்வொரு இந்துவும் மாலையில் சூரியன் மங்கும் நேரத்தில் வீட்டில்  விளக்கேற்றுவது ஒளியின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்கும் அதைச் சொல்லித் தந்ததால்தான்.

பகலில் நமக்கு ஒளியைத் தந்து நம்மை வாழவைக்கும் சூரியனும், இரவில் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று நம்மை ஒளியூட்டும் சந்திரனும் இதன் காரணமாகவே ஜோதிடத்தில் முதன்மைக் கிரகங்களாக அதாவது ஜோதிடத்தின் தந்தையும், தாயுமாக ஆக்கப்பட்டனர்.

இதன் காரணமாகவே பன்னிரு ராசிகளில் முதன்மை ராசியான மேஷத்தில் சூரியனுக்கு முழுபலம் எனப்படும் உச்சம் எனவும், இரண்டாவது ராசியான ரிஷபத்தில் சந்திரன் இருக்கும் போது அவருக்கும் உச்சம் எனப்படும் முழுபலம் எனவும் நமது ஞானிகள் வகுத்தனர்.

இதையே சற்று வேறுவகையில் சொல்லப் போவோமேயானால் சூரியன் முழு ஆற்றலுடன் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்திற்குரிய மேஷராசி, ராசிகளில் முதன்மை ராசியாக ஆக்கப்பட்டது.

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று ரிஷபராசியில் இருந்து சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் பௌர்ணமி நிலவு மிகப் பிரகாசமாய் இருப்பதைக் கண்டு சந்திரன் முழுபலம் பெறும் ரிஷபராசி இரண்டாவதாக உருப் பெற்றது.

3ஜோதிடப்படி நவக்கிரகங்களில் ஒளிக்கிரகங்கள் எனப் போற்றப்படும் சூரியனும், சந்திரனுமே முதன்மையானவை.

நமது பூமி சூரியனைச் சுற்றி வரும் 360 டிகிரி கொண்ட நீள்வட்டப் பாதையே சமமான பங்கு கொண்ட பன்னிரண்டு ராசிகளாக நமது ஞானிகளால் அமைக்கப்பட்டது.  இந்தப் பாதையில் கிரகங்கள் இயங்கும் போது சில ராசிகளில் பலம் பெறுகின்றன. சிலவற்றில் பலம் இழக்கின்றன என்று ஜோதிடம் சொல்லுகிறது.

அதாவது தங்களின் சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும்போது கிரகங்கள் தங்களின் ஒளி அளவை இழக்கின்றன அல்லது தாங்கள் பெறும் ஒளி அளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன என்றும் வேத ஜோதிடம் கண்டுணர்ந்தது.

இதனை ஸ்தானபலம் என்று கூறி கிரகங்களின் வலுவை உச்சம் மூலத்திரிகோணம் ஆட்சி நட்பு சமம் பகை நீசம் எனவும் ஜோதிடம் வகைப்படுத்துகிறது.

உதாரணமாக குருபகவான் மகரராசியில் இருக்கும் போது முற்றிலும் பலம் இழக்கிறார். சனி துலாம்ராசியில் வலுவாகிறார். புதன் கன்னி ராசியில் முழுபலத்தை பெற, சுக்கிரன் அதே ராசியில் முற்றிலும் வலு இழந்து கெட்டுப் போகிறார் என வேதஜோதிடம் சொல்லுகிறது.

ஆனால் ஜோதிடத்தை மறுப்பவர்கள் இது போன்று ஒரு ராசியில் கிரகங்கள் பலம் பெறுகிறது அல்லது பலம் இழக்கிறது என்கிற நிலையை ஒத்துக் கொள்வது இல்லை. கிரகங்களின் நிலை எப்போதும் ஒன்றே என்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மைகள் ஏராளம். அண்டவெளியைப் பற்றி நாம் அறிந்திருப்பவை சமுத்திரத்தில் ஒரு துளிதான் என்பதை தயக்கமின்றி ஒத்துக் கொள்ளும் நவீன விஞ்ஞானிகள் இந்திய வேத ஜோதிடம் சொல்லும் கிரகபலம் என்பதையும் ஒத்துக் கொள்வதில்லை.

ஆனால் ஜோதிடம் சொல்லும் கிரகங்களின் பலம் என்பதை உண்மை என நிரூபிக்கும் ஆதாரமும் சூரியன் சம்பந்தப்பட்டதுதான்.

அது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(ஜனவரி 2-2015 மாலை மலர் நாளிதழில் வெளிவந்தது) 

2 Comments on சூரிய சந்திர சூட்சுமங்கள் C – 002

Leave a Reply

Your email address will not be published.


*