ஜோதிடம் எனும் தேவரகசியம்..! C – 001

ஜோதிடம் என்பது ஒரு தேவரகசியம்தான் என்பதில் ஜோதிடத்தை அறிந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

“நடப்பவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவையே”  எனக் கூறும் நமது வேதஜோதிடம் இந்த ஆண்டில், இந்நாளில், இந்த மணி நிமிடத்தில், இந்த இடத்தில் நீங்கள் இப்பிரபஞ்சத்தினுள் நுழைய அனுமதிக்கப்படும்போதே,  எப்போது இங்கிருந்து வெளியேறப் போகிறீர்களோ அதுவரை உங்களுக்கு நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் முன்பே உறுதி செய்யப்பட்டவைதான் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதித்யகுருஜி எனும் பெயர் கொண்ட இந்த எளியவன் எழுதியதை இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பது கூட ஜோதிடத்தின்படி முன்பே நிச்சயிக்கப் பட்டதுதான்…!

மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய விஞ்ஞானி என போற்றப்படும் சர். ஐசக் நியூட்டன் ஒரு முறை சொன்னார்…..

“கடற்கரையில் இதோ ஒரு கூழாங்கல்… அதோ ஒரு கூழாங்கல்… என்று பொறுக்கி விளையாடும் சிறுவன் நான்.  என் முன்னால் உண்மை எனும் மகாசமுத்திரம் பரந்து விரிந்து கிடக்கிறது” என்று.

ஜோதிடர்களும் அப்படித்தான்….!

1ஒரு வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதில்லை. அதேநேரத்தில் நூறுமார்க் எடுப்பவனுக்கும் பத்துமார்க் எடுத்து பெயில் ஆனவனுக்கும் மாணவன் என்றுதான் பெயர்.

அதுபோலத்தான் ஜோதிடத்துறையிலும் எல்லா ஜோதிடர்களும் முழுமை பெற்றவர்கள் அல்ல. ஒரு ஜாதகத்தை தவறாகப் பலன் சொல்பவருக்கும் சரியாகச் சொல்பவருக்கும் ஜோதிடர் என்றுதான் பெயர்.

இது ஜோதிடரின் குற்றம். ஜோதிடக்கலையின் தவறு அல்ல.

கணிப்புத்திறமையே ஜோதிடர்களின் பலம். அதுவே ஒருவரைத் தலைசிறந்த ஜோதிடர் ஆக்குகிறது. இன்னொருவரைத் தடுமாற வைக்கிறது.

பனிரெண்டு ராசிக்கட்டங்களில் அடங்கிய ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்களின் இருப்பைச் சரியாகக் கணிப்பதில்தான் ஜோதிடத்தின் அடிநாதமே அடங்கி உள்ளது.

ஜோதிடம் எனும் எதிர்காலத்தை அறிவிக்கும் இந்த மாபெரும் இயல் உங்கள் முன் நடக்கப் போவதை அதாவது எதிர்கால சம்பவத்தை ஒரு இடத்தில் நிலையாக வைத்து விட்டு அந்த இடத்தை அடைவதற்கு நான்கு அல்லது ஐந்து வழிகளையும் அமைத்து உரியவழியை உங்கள் கணிப்புக்கே விட்டுவிடும்.

அந்த வழியைச் சரியாகக் கண்டுபிடிப்பதே ஜோதிடரின் முன்னுள்ள சவால்.

எல்லா ஜாதகங்களிலும் எதிர்காலம் என்ற உண்மை சர்வ நிச்சயமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பரம்பொருள் அதை மிகவும் நேர்மையாக மறைத்து வைத்து ஜோதிடம் தெரிந்தவரிடம் முடிந்தால் கண்டு பிடித்துக்கொள் என்று விட்டுவிடுகிறது.

‘என்னைக் கண்டுபிடி’ என்று மார்தட்டி குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் தேவரகசியத்தை ஓரளவுக்கேனும் உணர்வதில்தான் ஒரு ஜோதிடரின் ஆன்மபலம் வெளிப்படுகிறது.

ஜோதிடத்தில் கணிப்பும் கணக்கும் இன்றியமையாதவை. ஒரு ஜோதிடருக்கு கணிப்புத் தவறலாம். ஆனால் கணக்குத் தவறவே கூடாது.

ஒன்பதின் அடுக்குகளாய் சூட்சுமத்தின் உள்ளே… மறுபடியும் உள்ளே… மீண்டும் உள்ளே… என முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதுதான் ஜோதிடம்.

பல ஜாதகங்களில் என்ன நடக்கும் என முன்னரே சொல்ல முடியாவிட்டாலும் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்று ஜோதிடரீதியாக ஒரு முழுமையான ஜோதிடரால் நூறு சதவிகிதம் உணர முடியும். விளக்க முடியும்.

இதுவே ஜோதிடத்தின் மகத்தான சிறப்பு.

2இந்த தெய்வீக சாஸ்திரத்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் ஜோதிடத்தைப்  பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர்கள் அனைவரும் இதன் உண்மையை உணர்ந்து இதில் ஐக்கியமாகி ஜோதிடம் என்பது தேவரகசியம்தான், இது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு மாபெரும் இயல்தான் என்பதை பிறருக்கும் எடுத்துச் சொன்னதுதான்.

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் பன்முகமேதை திரு. தமிழ்வாணன் அவர்கள் ஜோதிடம் பற்றிய தமது முதல்நூலான  ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் எனும் புத்தகத்தின் முன்னுரையில் ஜோதிடத்தில் நம்பிக்கையே இல்லாத தான் இந்த நூலை எப்படி எழுத நேர்ந்தது என்பதை மிக அழகாக விளக்கி இருப்பார்.

புனிதத்தோடும் கணிதத்தோடும் தொடர்புடைய இந்த மாபெரும் கலையில் மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடம் இல்லை.

நமது கிரந்தங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் மூடநம்பிக்கையான வார்த்தைகளையோ நம்பவே முடியாத கண்மூடித்தனமான செயல்களையோ சொல்லவே இல்லை.

வானில் ஒரு ஒழுங்கான நியதிக்கு கட்டுப்பட்டு சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களையும் அதன் தலைவனான சூரியனையும் மனிதரூபமான தெய்வங்களாக ஞானிகள் உருவகப்படுத்தியதற்கு காரணம் கூட, அடுத்த தலைமுறைக்கு, அதாவது இளம் வயது சிறுவர்களான சீடர்களுக்கு சொல்லிக் கொடுப்பது எளிதாக இருக்கட்டும் என்ற காரணத்தினால்தான்.

அறிய முடியாத மற்றும் எளிதில் அணுக முடியாத தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை இளம் வயது மாணவன் விளங்கிக் கொள்வதற்காக அவன் நன்கு அறிந்த அவனுக்கு எதிரில் இருக்கும் ஒரு மனிதனைப் போன்ற உருவமாக உருவகப்படுத்தி கிரகங்களின் செயல்களை சீடர்களுக்கு ஞானிகள் புரிய வைத்தார்கள்.

இதே காரணத்திற்காகத்தான் ஒவ்வொரு கிரகங்களும் மனித ரூபமாக்கப்பட்டு அதற்கு மனைவியர்களும், அவற்றின் துணைக்கோள்கள் மகன்களாகவும் ஆக்கப்பட்டன.

“சனியின் உபகோளான மாந்தி (TITAN)  சனியின் ஒரு துணைக்கோள். அது சனியைச் சுற்றிவரும். எப்போதும் சனியுடன்தான் இருக்கும்” என்று சுற்றி வளைத்துச் சொல்லிக் கொடுப்பதை விட “சனியின் மகன் மாந்தி” என்று ஒரே வார்த்தையில் புத்தகங்களும் பேனாக்களும் இல்லாத மாணவனிடம் ஞானிகளால் எளிதாக விளக்க முடிந்திருக்கும்.

சூரிய மண்டலத்தில் வெகு தொலைவில் இருப்பதால் சூரியனை சனி மெதுவாக சுற்றிவருகிறது என்பதை விளக்க “சனியை எமன் அடித்ததால் சனி நொண்டியாகி விட்டான்” என்ற ஒருவரிக் கதை புரிய வைத்து விடுமே..!

3நமது கிரந்தங்களில் ஞானிகளால் கூறப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும், கிரகங்களின் கணவன்-மனைவி, புத்திரர்கள் போன்ற உறவுமுறைகளுக்கும் பின்னால் ஒரு அற்புதமான விஞ்ஞான விளக்கம் ஒளிந்து கிடப்பதை என்னால் தெளிவாக விளக்க முடியும்.

“சந்திரனுக்கு 27 மனைவிகள். அவர்களில் ரோகிணியை அவருக்கு மிகவும் பிடிக்கும்” என்ற கதைக்குப் பின்னால் பூமியின் துணைக்கோள் சந்திரன் ஒன்று. மொத்தமுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் 27. அவற்றில் ரிஷபராசியின் முழு நட்சத்திரமான ரோகிணியில் சந்திரன் இருக்கும்போது அவர் பலம் அடைவார் என்ற ஜோதிட உண்மை  இருக்கிறது.

வேதங்களில் உள்ள இது போன்ற ஏராளமான கதைகளின் மறைவில் அற்புதமான வேதாந்த உண்மைகளோ அல்லது சாதாரணமாக உணர முடியாத பிரபஞ்ச ரகசியங்களோ ஒளிந்து கிடப்பதை அறிவதற்கும் ஒரு தனித்துவம் வேண்டும் என்பதும் நமது இந்திய ஜோதிடத்தின் ஒரு தனிச் சிறப்புத்தான்.

அதேபோல அனைத்தும் முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது என்றால் இதுதான் எனக்கு நடக்கப்போகிறது என்றால் பரிகாரங்கள் என்பது எதற்கு? அவை எப்படி எனது தலைஎழுத்தை மாற்ற முடியும்? முரண்பாடாக உள்ளதே?

தொடர்ந்து வரப்போகும் கட்டுரைகளில் இது போன்ற நுணுக்கமான ஜோதிட விளக்கங்களைச் சற்று விரிவாகச் சொல்லுகிறேன்.

வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்…

(டிசம்பர் 26 – 2014 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code